பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம்

பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்- பயறுவகைகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 33,100 எக்டேர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்திற்கு பயறு விதைகள் சாகுபடி இலக்கு 50,500 எக்டேர் வழங்கப்பட்டுள்ளது. பயறு வகைகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க இத்திட்டத்தின் கீழ் 1,500 எக்டேர் பரப்பளவில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வீதம் விதை மானியத்தில் 30 மெட்ரிக் டன் உளுந்து விதைகள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட 76 மெட்ரிக் டன் உளுந்து விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.25 மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இதை வட்டாரங்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மானியம் உயிர் உரம் 3,398 எக்டேருக்கும், நுண்ணூட்டக்கலவை உரம் 700 எக்டேருக்கும் 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. பயிர் பாதுகாப்பு மருந்து வினியோகத்திற்கு பின்னேற்பு மானியமாக 400 எக்டேருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு சுழற்கலப்பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.42 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ.34 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.

பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.3,800 அல்லது 50 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயறுவகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உரிய ஆவணங்களை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!