குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை: ஆட்சியர் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை: ஆட்சியர் எச்சரிக்கை
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளை வேலைக்கு வைத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுவர்களை குழந்தை தொழிலாளர்களாக பணிக்கமர்த்திய நிறுவனங்கள் மீது அபராதமும், ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களை குழந்தை தொழிலாளர்களாக பணியமர்த்துவது கண்டறியப்பட்டால் அந்நிறுவன உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.மோகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில், தொழிலாளர் துறையின் சார்பாக, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் ) சட்டம், 1986-ன் கீழ் விழுப்புரம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாவட்ட தடுப்பு குழுவினரால் விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழுப்புரம், தொழிலாளர் துறை மற்றும் மாவட்ட தடுப்பு குழுவினரால் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் ) சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டதில் விழுப்புரம், கெடார் பகுதியில் செயல்பட்டு வந்த ஜி.கே. ஆட்டோ ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தில் 1 சிறுவனும், சூரப்பட்டு பகுதியில் செயல்பட்டு வந்த மீனாட்சி டூவீலர் ஓர்க்ஸ் என்ற நிறுவனத்தில் 1 சிறுவனும், விழுப்புரம் புதுத்தெருவில் இயங்கி வரும் ரகுராமன் நகை வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து 3 சிறுவர்களும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டதுடன் விழுப்புரம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் அ.சார்லி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது விழுப்புரம், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களான ஜி.கே. ஆட்டோ ஒர்க்ஸ் மற்றும் மீனாட்சி டூவீலர் ஓர்க்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் (மொத்தம் ரூ.40,000) அபராதமும், ரகுராமன் நகை வேலை செய்யும் நிறுவன உரிமையாளருக்கு 3 சிறார்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் மொத்தம் ரூ.60,000/ அபராதமாகவும், ஒரு நாள் நீதிமன்ற சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், இதுபோன்று குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் தொழிலாளர் துறை மற்றும் மாவட்ட தடுப்பு குழுவினாரால் அவ்வப்போது கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் ஆய்வின் சமயம் குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டறியும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அபராதமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சமாக ரூ.50,000/- வரையும் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!