வரத்து வாய்க்கால்களில் டீ கப்புகளை போட வேண்டாம்: ஆட்சியர்

வரத்து வாய்க்கால்களில் டீ கப்புகளை போட வேண்டாம்: ஆட்சியர்
X

மழைநீர் வடிகால் வாய்க்கால்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் வரத்து வாய்க்கால்களை ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பொன்னேரி கால்வாய்க்கு செல்லும் வடிகால்வாய் ஆரம்ப பகுதியான பாண்டியன் நகர், சிங்கப்பூர் நகர், பொன்னேரி கால்வாய் துவாரப்பகுதி, கே.கே.ரோடு, சாலமேடு, கீழ்ப்பெரும்பாக்கம் இரயில்வே தரைப்பாலம் மற்றும் வண்டிமேடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மழையினால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிப்படையாமல் பாதுகாத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பொன்னேரி கால்வாய் ஆரம்ப பகுதியான பாண்டியன் நகரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தங்குதடையின்றி செல்கிறது. மேலும், வாய்க்காலில் வரும் மழைநீரில் ஏதேனும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள், செடிகொடிகள் மற்றும் மரக்கிளைகள் போன்றவைகள் அடித்து வரப்பட்டால் உடனுக்குடன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் நகராட்சி பணியாளர்களை கொண்டு, உடனடியாக தண்ணீரை வெளியேற்றி பீளிசிங் பவுடர் தெளித்தும், கொசுக்கள் வராமல் இருக்க கொசு மருந்து அடித்தும், குடியிருப்பு பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் டீ கப், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை போட வேண்டாம். இதனால் வடிகால் வாய்க்காளில் தேவையற்ற அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் தடையின்றி செல்ல சிரமமாக உள்ளது. எனவே, டீ கடைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கப் மற்றும் தேவையற்ற பொருட்களை குப்பை தொட்டியில் போட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்ந்து, கீழ்ப்பெரும்பாக்கம் இரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் மூலம் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமலும், பொது மக்களுக்கு இயல்பு நிலை பாதிக்காத வண்ணம் அனைத்து பணிகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், வண்டிமேடு பகுதி மழைநீர் வடிகால் வாய்க்காலில் தங்குதடையின்றி தண்ணீர் செல்கிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் இரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) ஷோபனா, விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்தர ஷா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!