விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து அதிமுக தர்ணா
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து திடீர் தர்னாவில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் ரூ.1,509 கோடிக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்வதற்காக மாநில அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளாதாகவும், இத்திட்டத்தை கைவிடக்கூடாது எனக்கூறி முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே அதிமுகவினர் சனிக்கிழமை சாலையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவுக்குப்பின் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ரூ.1,509 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அதிமுக அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்த திமுக, இத்திட்டத்தை ரத்து செய்வதாக கடந்த மே மாதத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது.இத்தகவலை இதுவரை தமிழக முதல்வரோ அல்லது மாவட்ட அமைச்சர்களோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த தகவல் கிடைத்தவுடன் 2 நாள்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, இது தவறான தகவல் என சொன்னார்.
ஆனால், அரசாணையில் ஆட்சியருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாக இருந்தால் ஆட்சியர் பொய் சொல்கிறாரா அல்லது ஆட்சியருக்கு அரசாணை நகல் அனுப்பப்படவில்லையா என்பது பொதுமக்களுக்கே வெளிச்சம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் அரசு கைவிட்டு வருகிறது. இதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தவேண்டும். இல்லையென்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சி.வி.சண்முகம் தெரிவித்தார். தர்ணாவில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர், இதனால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu