போராட்டம் நடத்திய கிராம மக்களுடன் அமைச்சர் பேச்சு வார்த்தை
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் டி.எடப்பாளையம் ஊராட்சி, திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்குட்பட்டது, இந்த டி.எடப்பாளையம் ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடு்க்கவில்லை.
இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை, பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு அலுவலர்களை சந்திக்கமுடியாமல் சிரமப்படுவதாகவும், தங்களின் நில பரப்புகள் உள்ள சித்தலிங்கமடம், எல்ராம்பட்டு, மருதூர், தி.கொடியூர் ஆகிய பகுதிகளை ஒன்றாக இணைத்து டி.எடப்பாளையம் ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கும்வரை தொடர்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி டி.எடப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாமியான பந்தல் அமைந்து கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது குறித்த தகவல் அறிந்த பொன்முடி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அடுத்த மாதம் 23-ந் தேதிக்குள் வருவாய் கிராமம் வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதி அளித்தார். இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu