திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி

திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.20 லட்சம்  பணம் வழிப்பறி
X
விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து ரூ.1.20 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கொந்தமூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் சாரம் - ஈச்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். ரமேஷ் விற்பனையான பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரமேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் ரமேஷ், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து ரமேசிடம் இருந்த பணம், டாஸ்மாக் கடை சாவி, அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை அந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரமேஷ் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர், தொடர்ந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் சாவியை மர்ம நபர்கள் எடுத்து சென்றதால் அந்த கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story