போலீஸ் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்த வாலிபர் கைது

போலீஸ் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்த  வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட சாம்ராஜ்.

மயிலம் அருகே திண்டிவனம் புதுச்சேரி சாலையில், போலீஸ் என கூறி வாகன ஓட்டிகளிடம் வசூல் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் மயிலம் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபடுவதற்காக மாறுவேடத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மயிலம்-புதுச்சேரி சாலையில் பெரும்பாக்கம் ஆவின் பாலகம் அருகே சென்றபோது, அங்கு நின்ற வாலிபர் ஒருவர், அவர்களை வழிமறித்தார். பின்னர் அவர்களிடம், அந்த வாலிபர் தான் போலீஸ், உங்கள் வாகனத்தின் உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆவணங்கள் இல்லையென்றால் ரூ.1,000 கொடுங்கள் என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலம் அருகே பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் சாம்ராஜ் (வயது 32) என்பதும், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் போலீஸ் எனக்கூறி வசூலில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து சாம்ராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3,350-ஐ பறிமுதல் செய்தனர். போலீஸ் என கூறி மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடமே வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil