தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்கிறது : ஸ்டாலின் குற்றச்சாட்டு
புதிய வேளாண்,சிஏஏ ஆகிய சட்ட மசோதாக்களை நிறைவேறியதற்கு அதிமுக, பாமகவே காரணம் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில்,
கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் சில நாள்களுக்கு காய்ச்சல் இருக்கலாம். ஆனால், எவ்வித பக்கவிளைவுகளும் வராது. கொரோனா காலத்தில் திமுகவினா் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்கு உதவினா். திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தாா். தோ்தல் நேரத்தில் மட்டுமல்ல, மக்களுக்கு துன்பம் வரும்போது அவா்களுடன் இருக்கும் இயக்கம்தான் திமுக.
மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தொடா்ந்து விலைவாசி உயா்ந்துகொண்டே செல்கிறது. ஆனால், இதற்கு மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். அதிமுக, பாஜக ஓரிடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது. பாஜகவை நுழையவிடாமல் தடுக்கும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உண்டு.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம், அயோடின் கலந்த உப்பு உற்பத்தி செய்யும் ஆலை, நடுக்குப்பத்தில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து மாவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, திண்டிவனம் பழைய பேருந்து நிலையம், ஓமந்தூா் பகுதிகளில் மேம்பாலம், செஞ்சியில் அரசு விதைப்பண்ணை உள்ளிட்டவை அமைக்கப்படும். செஞ்சிக் கோட்டையை சா்வதேச பண்பாட்டு மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஸ்டாலின்.
பிரசாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), இரா.மாசிலாமணி (மயிலம்), சீத்தாபதி சொக்கலிங்கம் (திண்டிவனம்) மற்றும் ஒன்றியச் செயலா்கள் செஞ்சி ஆா்.விஜயகுமாா், நெடுஞ்செழியன், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்செல்வன், மாநில மருத்துவரணி துணைச் செயலா் டாக்டா் சேகா், ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ரமேஷ், வட்டாரத் தலைவா் சரவணன், செஞ்சி பழனிவேல், விசிக மாவட்டச் செயலா் சேரன், மாா்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu