குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
X

வந்தவாசியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலையில் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் சுற்றுச்சுவர் அருகே கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது, குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யக்கோரி இந்த பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் 15 நாட்களாக குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். 3 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. குடிநீருக்காக அவதிப்பட்ட அப்பகுதி மக்கள் வந்தவாசி- ஆரணி சாலையில் கொசப்பாளையம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நகராட்சி முன்பு போராட்டம் நடத்தி ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவோம், என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி பொறியாளர் உஷாராணி ஆகியோர் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!