குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
X

தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

வந்தவாசியில் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்

வந்தவாசி தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.ஸ்ரீதர், வேளாண்மை அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் வந்தவாசி நகர்ப்புற பகுதியியான கோட்டை மூலையில் நிழற்குடை அமைப்பதற்காக பல கூட்டங்களில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது பதிலளிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கூட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வராததை கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அவர்களை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நிழற்குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி திட்ட அலுவலர் திருமால் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென விவசாயிகள் ஏர்கலப்பை போன்று செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தான் அதிக அளவு விளைச்சல் உள்ளது. ஆனால் இங்கு 2 நெல் கொள்முதல் மையங்கள் தான் செயல்படுகிறது. 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 செயல்பட்டால் விவசாயிகள் எப்படி முழுமையாக பயன்பெறுவார்கள்?. இதனால் கலசப்பாக்கம் பகுதியில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் உதவி திட்ட அலுவலர் திருமால் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தான் இந்த கூட்டமே நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் வேளாண் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

குறைவு தீர்வு கூட்டத்தில் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், பிடிஓ முருகன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil