வீட்டின் முன் படுத்து உறங்கிய குடும்பத்தினர், கைவரிசை காட்டிய திருடர்கள்

வீட்டின் முன் படுத்து உறங்கிய குடும்பத்தினர், கைவரிசை காட்டிய திருடர்கள்
கலசப்பாக்கம் அடுத்த நாயுடு மங்கலத்தில் இரண்டு வீடுகளில் 42 சவரன் நகை கொள்ளை

கலசப்பாக்கம் அருகே வங்கி நகை மதிப்பீட்டாளர், அடகு கடைக்காரர் வீடுகளில் பின்புற ஜன்னலை உடைத்து புகுந்து 42 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம். கலசப்பாக்கம் அடுத்த நாயுடு மங்கலம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(56), இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் வெங்கடேசன்(40), நாயுடு மங்கலம் மெயின் ரோட்டில் அடகு மற்றும் நகை கடை நடத்தி வருகிறார். இருவரது வீடுகளும் அருகருகே உள்ளது.

இந்நிலையில், கலசபாக்கம் பகுதியில் இரவு பரவலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்சாரம் தடைபட்டதால் இரு குடும்பத்தினரும் இரவு வீட்டின் வெளியே உள்ள போர்டிகோவில் படுத்து தூங்கினர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து சென்று பீரோவில் வைத்திருந்த 32 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதேபோல் அருகில் இருந்த அண்ணாமலை என்பவர் குடும்பத்துடன் காற்றோட்டமாக வெளியில் தூங்கி உள்ளனர். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ளனர்.

உடனடியாக கலசபாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. ஆனால் அது சிறிது தூரம் ஓடிச்சென்று யாரையும் கவ்வி பிடிக்காமல் திரும்பிவிட்டது. இதுகுறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடி வருகின்றனர்

நேற்று வந்தவாசி பகுதியில் இதே போல் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது கலசப்பாக்கம் பகுதியில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story