வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பும் பணி

வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பும் பணி
X

தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் மலை மற்றும் கவுத்தி, வேடியப்பன்மலை காப்புக்காடு பகுதிகளில், தண்ணீரின்றி தவிக்கும் வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.திருவண்ணாமலையில், கோடை காலம் தொடங்கும் முன்பே, வெயில் பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

அதிகாலையில் பனியும், குளிரும் குறையாத நிலையில், பகலில் அதிகபட்ச வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் கோடை வெயில் பாதிப்பு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் வாரத்திலேயே கோடை வெயில் தொடங்கியிருக்கிறது.

எனவே, திருவண்ணாமலை தீபமலை, கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளில் உள்ள மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் போன்றவை தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளையும், வயல்வெளிகளையும் நோக்கி வருவது அதிகரித்துள்ளது

அதேபோல், கிரிவலப்பாதைக்கு அருகே அமைந்துள்ள வேடியப்பன் மலை, கவுத்திமலைகளிலும் அமைந்துள்ள நீர் சுனைகள் வற்றிவிட்டன. அங்கு, அடிக்கடி நடக்கும் தீ விபத்துகளும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.எனவே, இனி வரும் நாட்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தண்ணீருக்காக விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் நோக்கி வன விலங்குகள் வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான், காட்டுபன்றி, செந்நாய், குரங்குகள் என பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறி வனப்பகுதியில் நுழைபவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் மான்களை சில சமயங்களில் நாய்கள் துரத்தி கடித்து கொன்று விடுகின்றன.

இதனால் வன விலங்குகள் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காடு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் திருவண்ணாமலை வன சரகத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் சீனுவாசன் கூறுகையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மலையை சுற்றி வனப்பகுதியில் வன விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் உள்ளன. கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே செல்லாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றார். தண்ணீர் நிரப்பும் பணியானது கோடை காலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்