நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகள் சாக்குமூட்டையில் நின்று கொண்டு தத்தித்தத்தி செல்லும் நூதன போராட்டம் நடத்தினர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாக்குமூட்டையில் நின்று கொண்டு தத்தித்தத்தி செல்லும் நூதன போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மின்தடை, லாரி தடை, தினக்கூலி பிரச்சினை, உள்ளூர் விடுமுறை, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை எடை போட்டு வாங்குவதற்கு 10 நாட்கள் வரை ஆகிறது.
தமிழக அரசு சிப்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட கூலி ரூ.3.25ஐ உயர்த்தி ரூ.10 வழங்குவதாக அறிவித்தது. இந்த தொகை ஒரு மாதத்திற்கு பின்பே வழங்கப்படும் என்பதால் எடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேற்படி முறை கேட்டுக்கு காரணமான அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நெல் அறுவடை செய்து தனியாரிடம் விற்பனை செய்த விவசாயிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று தருகிறார். இதை வியாபாரிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்கின்றனர்.
மேலும் எடை போடும் கூலி பணியாளர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் பெற்று எடை கூலி பணத்தை வங்கி கணக்கில் ஒரு வாரத்திற்குள் செலுத்தி கண்காணிப்பு செய்தால் மட்டுமே ஊழல் மற்றும் முறைகேட்டை தடுக்க முடியும். எனவே அரசு நியமனம் செய்துள்ள கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர் செயல்பாடு இல்லாமல் உள்ளதை கண்டித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர கலெக்டரை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu