திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணன், தனது சகோதரிகள் 4 பேருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை அவர் மீதும், அவரது சகோதரிகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவர்களை மீட்டு தண்ணீர் ஊற்றினர்.
போலீசார் விசாரணையின் போது சரவணன் கூறுகையில், எனது தாத்தா பெயரில் 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்துடன் வீடு உள்ளது. உறவினர் ஒருவர் சொத்தில் எனக்கு பங்கு கிடையாது என்று அடித்து துன்புறுத்துகிறார். மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து அவரை போலீசார் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் அவரது மகள்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அந்த மூதாட்டியிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையின் போது மூதாட்டி கூறுகையில், எனக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்திலும் புகார் செய்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பின்னர் அவரை குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.
செய்யாறு தாலுகா திருமணி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், காய்கறி வியாபாரி. இவர், அவரது மனைவி பெயரில் உள்ள நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்து உள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
மனுக்கள் கொடுத்ததற்காக பெறப்பட்ட ரசீதுகளுடன் மொபட்டை சுற்றி தொங்கவிட்டப்படி அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போர்ட்டிகோ முன்பு ஆட்சியரை சந்தித்துவிட்டு தான் செல்வேன் என்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் வாகனத்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூறினர். ஆனால் அவர் அங்கேயே வெகு நேரம் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.
கீழ்பென்னாத்தூர் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது தலைமையில் நரிகுறவர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கோரிக்கை மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கோபி, எங்களுக்கு வீட்டுமனை பட்டா முறையாக வழங்கப்படவில்லை என்றும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சத்தம் போட்டு சொல்லி கொண்டிருந்தார். அங்கிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் திடீரென வேகமாக வெளியே வந்து பையில் வைத்திருந்த, முன்பு அளித்த பழைய கோரிக்கை மனுக்களின் நகல்களை தரையில் கொட்டினார். இதுவரை பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.
பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுக்களில் எழுதி தந்துவிட்டு செல்வர். இதில் வாரத்திற்கு இரண்டு பேராவது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றார்கள். தீக்குளிக்க முயற்சிப்பவர்கள் போலீசார் வருவதற்கு முன்பாகவே ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விடுகின்றார்கள்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு நுழைவுவாயில் மட்டுமின்றி விளையாட்டு அரங்கம் வழியாகவும், வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாகவும், நீதிமன்றம் செல்லும் வழியில் உள்ள பாதை வழியாகவும் வரலாம்.
தீக்குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட முயற்சி செய்பவர்கள் மற்ற பாதை வழியாக உள்ளே வர வாய்ப்புகள் உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க குறைதீர்வு நாளன்று போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu