திருவண்ணாமலையில் நேர்காணல் நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் மறியல்

திருவண்ணாமலையில் நேர்காணல் நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் மறியல்
X

திருவண்ணாமலையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதை கண்டித்து விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதை கண்டித்து விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் செய்தனர்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் இன்று முதல் வருகிற மே மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 57 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 1600 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில் நிர்வாக காரணமாக கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதை அறியாத திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று காலை திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள கால்நடைத்துறை மண்டல இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அலுவலகத்தின் முன்பு நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறித்து வைக்கப்பட்டு இருந்த பேனரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை முறையாக அறிவிக்காமல் விண்ணப்பதாரர்களை அலைக்கழித்ததை கண்டித்து அவர்கள் திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்களும் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இதுவரை 2 முறை நேர்காணலுக்கு வர வைத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். இது 3-வது முறையாகும். நேர்காணல் ரத்து என்றால் விண்ணப்பதாரர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் மற்றும் அலுவலர்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தற்போது நேர்காணல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அலுவலக கடிதவழி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!