மகளிா் உரிமைத் தொகை; தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

மகளிா் உரிமைத் தொகை;  தாலுகா  அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
X

தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

மகளிா் உரிமைத் தொகை பெற முடியாத பெண்கள் மேல்முறையீடு செய்ய, தாலுகா அலுவலகத்தில் குவிந்தனா்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளான கடந்த 15-ம் தேதியன்றே அவர்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள உதவி மையத்திற்கு, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிவதற்காக திரண்டனர்.

பின்னர் அவர்கள் தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பு நீண்ட வரிசையில் நின்று ஒருவர், பின் ஒருவராக உதவி மையத்தில் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் தங்களின் ரேஷன் கார்டு எண்ணை தெரிவித்தனர். அப்போது அலுவலர்கள் அவர்களிடம் உள்ள செல்போன் செயலியில் ரேஷன் கார்டு எண்ணை உள்ளீடு செய்ததும் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு உள்ளதா, நிராகரிக்கப்பட்டு உள்ளதாக, பரிசீலனையில் உள்ளதா, எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் வந்தது.

இதில் மேல்முறையீடு செய்ய இயலக் கூடிய நபர்களிடம் இ- சேவை மையம் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை செய்தனர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முதல் நாளான நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் இணையதள சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தின் முன்பு உள்ள மரத்தடியில் நீண்ட நேரம் காத்திருந்தனர் .

இது குறித்து தகவல் அறிந்து. தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, அங்கிருந்த பொது மக்களிடம் இணையதள சர்வர் பிரச்சனையில் உள்ளதால் டோக்கன் வழங்கப்படும் . அதனை வைத்து வெள்ளிக்கிழமை வந்து தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் டோக்கனை வரிசையில் நின்று பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போளூா் வட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை பெற முடியாத பெண்கள் மேல்முறையீடு செய்ய வட்டாட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் அளிக்கும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விடுபட்ட விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று போளூர் வட்டத்தை சேர்ந்த பெண்கள் மேல்முறையீடு செய்ய ஒரே நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அவர்களை வரிசையில் நிக்க வைத்து அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். இந்த விண்ணப்பத்தினை சரி பார்த்து தங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story
மட்டன் சாப்டும்போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்டாதீங்க.. உயிருக்கே ஆபத்தாகலாம்..!