தலைமை ஆசிரியர் இடமாற்றம்: பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பள்ளியின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், கிராம மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி கிராம ஊராட்சி ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊராட்சி ஆரம்ப பள்ளி 1945 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இப்பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஊராட்சி ஆரம்பப்பள்ளி மாவட்ட அளவில் கற்பித்தல், ஒழுக்கம், மாணவர்கள் வருகை பதிவேடு ஆகியவற்றில் சிறப்பு பெற்று மாவட்ட ஆட்சியர் மூலமாக சிறப்பு பள்ளி என்ற பெயர் பெற்றுள்ளது மேலும் இப்பள்ளியில் ஆங்கில வழி கற்றல் கற்பிக்கப்பட்டு மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருவதால் பெற்றோர்களின் பாராட்டுகளையும், இப்பகுதி பொதுமக்களின் பாராட்டுகளையும் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணனை, போளுரை அடுத்த செங்குணம் பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி தலைமையாசிரியரை பணியிடமாற்றம் செய்த கல்வி துறையை கண்டித்து பள்ளி மேலாண்மை குழு, கிராம மக்கள், மற்றும் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து பள்ளியின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணியிட மாற்றம் செய்த தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் இதே பள்ளியில் பணி அமர்த்த கோரிக்கையும் வைத்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் தனியார் நர்சரி பள்ளிகள் உள்ளது. அங்கு பயிலும் மாணவர்களை பெற்றோர்கள் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் சேர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தனியார் நர்சரி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த தனியார் பள்ளி உரிமையாளர்கள் அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணனை பணியிட மாற்றம் செய்து வேறொரு பள்ளிக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது என தெரிவித்தனர்
மேலும் பெற்றோர்கள் தரப்பில் கூறும் போது தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் இதே பள்ளியில் பணி அமர்த்த வில்லை என்றால் பள்ளியில் படிக்கும் பள்ளியில் படிக்கும் 140 மாணவ மாணவிகளின் பள்ளி சான்றிதழ்களை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொண்டு வேறு அரசு பள்ளியில் சேர்ப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu