ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்
108 ஆம்புலன்ஸ் (பைல் படம்)
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கூலித்தொழிலாளி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
சேத்துப்பட்டு அடுத்த மேல்வில்லிவனம் மதுரா சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(35), விறகு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவரும் கணவருடன் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கிருஷ்ணவேணி நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்து சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் கிருஷ்ணவேணி சேர்க்கப்பட்டார். அங்கு செவிலியர் பிரசவம் பார்த்ததில் கிருஷ்ணவேணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், அவரது உடல் நிலை கருதி மேல்சிகிச்சைக்காக மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் கோபிநாதன் ஓட்டி சென்றார். செல்லும் வழியில் அவலூர்பேட்டை அருகே கிருஷ்ணவேணிக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்படவே உதவியாளர் நாகராஜ் ஆம்புலன்ஸ்சை ஓரமாக நிறுத்தி பிரசவம் பார்த்தார். அப்போது, கிருஷ்ணவேணிக்கு மேலும் பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, தாய் கிருஷ்ணவேணி மற்றும் 2 பெண் குழந்தைகளை ஆம்புலன்சில் அழைத்து சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu