மான் வேட்டையில் விபரீதம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

மான் வேட்டையில் விபரீதம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்

ஜவ்வாது மலையில் மான் வேட்டையின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகே ஈச்சங்காடு வனப்பகுதியில் ஜமுனாமரத்தூர் தாலுகா தென்மலை மற்றும் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், சக்தி, வாசன் உள்ளிட்ட நான்கு பேர் மான் வேட்டைக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது வனப்பகுதியில் மானை துப்பாக்கியால் சுட முயன்ற போது வேட்டைக்கு சென்ற சக்திவேல் மீது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பிரகாஷ் என்பவர் காயத்துடன், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுகுறித்து வனம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், சக்திவேல் உடலை அடக்கம் செய்யும் முயற்சியில், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இந்த தகவல் ரகசியமாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த புதுப்பாளையம் மற்றும் ஜமுனாமரத்தூர் போலீசார் உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து புதுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து படுகாயம் அடைந்த பிரகாஷ் என்பவரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அடுத்த மாறிய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் , மரம் வெட்டும் தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இந்த நிலையில் செல்வராஜ் காகனம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வலையை எடுத்து சென்றார். ஏரியில் மீன் பிடிக்கும் வலையை போட்டு விட்டு காத்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்பு வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது வலையில் கால் சிக்கிக் கொண்டது. பின்னர் தண்ணீரில் மூழ்கி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

காலை அந்த வழியாக சென்றவர் செல்வராஜ் தண்ணீரில் பிணம் மிதப்பதாக கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதுகுறித்து செல்வராஜின் மகன் ஜீவா மோரணம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை ஏரியில் இருந்து மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!