2 ஆண்டுக்குப்பின் நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தை ரூ.57 லட்சத்துக்கு ஏலம்
பைல் படம்.
போளூர் ஒன்றியம் கேளூர் பகுதியில் நடக்கும் மாட்டுச்சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். சனிக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனைத்து ரக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.51 லட்சத்திற்கு ஏலம் போனது. அதன்பிறகு கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏலம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பொது ஏலம் நடந்தது. இதில் வெளியூர்காரர்கள் யாரும் ஏலம் கேட்க கூடாது என உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ரூ.25 லட்சத்திற்கு மேல் யாரும் ஏலம் கேட்கக்கூடாது என அவர்கள் சிண்டிகேட் அமைத்தனர். இதனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின் பேரில் குறைந்தபட்சம் ஏலத்தொகை ரூ.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று கேளூர் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் ஊராட்சி தலைவர் சங்கீதா அன்பழகன், துணைத்தலைவர் தாமரைச்செல்வி ஏழுமலை, ஆணையாளர் பாபு, வட்டார வளர்ச்சி அதிகாரி பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் 40 பேர் கலந்து கொண்டனர். இதில் ரூ.57 லட்சத்து 56 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu