திருமணம் முடிந்த அடுத்த வினாடியிலேயே தாலியை கழற்றி வீசி எறிந்த மணப்பெண்
கோப்பு படம்
திருமணம் முடிந்த அடுத்த வினாடியிலேயே, தாலியை கழற்றி வீசி எறிந்த மணமகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வங்கியில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கும், போளூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதாக பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடந்தது. அதில் மணப்பெண் ஒய்யாரமாக அமர்ந்து வந்தார்.
மணப்பெண் அழைப்பு முடிந்ததும் தடபுடலான விருந்தும் நடைபெற்றது காலை திருமணத்திற்கு அனைவரும் வந்து விடுங்கள் என தனது நண்பர்கள் உறவினர்களிடம் மகிழ்ச்சி பொங்க மணமகள் கூறி வழி அனுப்பி வைத்தாராம்.
நேற்று காலையில் போளூரில் உள்ள கோவிலில் திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மணமக்களின் பெற்றோர்கள் உட்பட, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மணமக்களை வாழ்த்த திரண்டு வந்திருந்தனர்.
புரோகிதர் மந்திரங்களை சொல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.தலை குனிந்து அழகாக தாலியை மணப்பெண் ஏற்றுக் கொண்டார்.
வாழ்த்த வந்திருந்த அனைவரும் தங்கள் கைகளில் கொடுக்கப்பட்டுள்ள மங்கள அட்சதைகளை தூவி மணமக்களை வாழ்த்த தயாரானார்கள்.
கழுத்தில் தாலி ஏறிய அடுத்த வினாடியே, எனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என்று கூறியவாறு மணப்பெண் தாலியை கழற்றி வீசி எறிந்தார்.
இதனால் திருமணத்திற்கு வாழ்த்த வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இரண்டு வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாரும் மண்டபத்திற்கு வந்தனர். அவர்களும் மணமகளிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப மணமகள் கூச்சலிட்டுள்ளார்.
அதற்கு, மணமகனை பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியது தானே. தாலி கட்டிய பிறகு மணமகனை பிடிக்கவில்லை என்றால் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு மணமகள் வாயை திறக்காமல் மவுனமாக இருந்துள்ளார்.
பின்னர் மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பினர்.
பின்னர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு உடனடியாக அங்கே திருமணம் நடைபெற்றது.
'இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று ' என்று கூறி பெரியவர்கள்,உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu