சேத்துப்பட்டு அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இரு வீட்டு பெற்றோர் திருமணத்திற்கு வந்தவர்கள் என அனைவர் மீதும் காவல்துறை மூலம் வழக்கு பதிந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், காட்டு தென்னூா் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்-வேண்டா தம்பதியின் மகன் சந்துரு.
இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக, மாவட்ட சமூக நல அலுவலா் மீனாம்பிகைக்கு புகாா்கள் சென்றன.
1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணுக்கு வந்த புகாரையடுத்து மாவட்ட சைல்ட் லைன், காவல்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டாா்.
மேலும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2007 இன் படி இக்குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் மற்றும் திருமண ஏற்பாட்டிற்கு அலங்காரம் செய்ய ஒப்புக்கொண்டவர்கள், திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் அனைவரின் மேலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் திருமண பத்திரிகையில் பெயர் பொறிக்கப்பட்ட சொந்தக்காரர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திருமண மண்டபம் உரிமையாளர் மற்றும் புரோகிதர் ஆகியோர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதன்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணத்திற்கு வந்தவர்கள் பெற்றோர் உறவினர்கள் புரோகிதர் சமையல் காரர்கள் அலங்காரம் செய்தவர்கள் என அனைவர் மீதும் புகார் பதியப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்களுக்குச் செல்வோா், திருமண மண்டப உரிமையாளா்கள், புரோகிதா்கள் ஆகியோா் மணப்பெண்ணின் வயதை தெரிந்துகொண்டு திருமணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu