சேத்துப்பட்டில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலம்
சேத்துப்பட்டில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்
சேத்துப்பட்டில் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி அருகே தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் பழம்பேட்டை, பள்ளத் தெரு, மேட்டு தெரு, ஆரணி, செஞ்சி சாலை, அண்ணா தெரு, போளூர் சாலை வழியாக வந்தவாசி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே முடிந்தது. இதனை தொடர்ந்து அங்கு ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சேத்துப்பட்டு மணி தலைமை வகித்தார். கீதானந்த அனுமன் மாதாஜி, மாவட்டத் தலைவர் ராமநாதன், மாவட்டத் துணைத் தலைவர் பாமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன கிருஷ்ணன் பேசியதாவது:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் தொடங்கப்பட்டு 90வது ஆண்டு நிறைவடைந்து 100வது ஆண்டு தொடங்குகிறது. இந்த இனிய தருணத்தை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் 57 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடக்கின்றன. சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து செல்வதை பார்த்து சமுதாயம் தன்னம்பிக்கையும், ஒற்றுமையுணர்வும் அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதை கருத்தில் கொண்டே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குஜராத் முதல் அருணாசலப் பிரதேசம் வரை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.
1962 சீன போர் நேரத்தில் இந்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய்த உதவிகளை பாராட்டி, 1963ல் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்களை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசாங்கம் அழைத்தது வரலாறு.
ஒட்டுமொத்த சமுதாயத்தின் எழுச்சிக்காக பணியாற்றும் ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களில் வெறுப்பு பிரசாரங்கள், வன்முறை சம்பவங்கள் போன்றவை ஒருபோதும் இடம் பெறாது. ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு தமிழக அரசும், போலீசும் அனுமதி மறுத்து நீதிமன்றத்தின் உதவியுடன் நடத்தும் தவறானபோக்கு நிலவுகிறது.
அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டது. இந்த ஆண்டும் சில இடங்களில் தேவையற்ற காரணங்களை காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று அனைத்து இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்த அனுமதி அளித்தது. எங்களது ஜனநாயக உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதித்து, வருங்காலத்தில் தமிழக அரசும், போலீசும் தாமாகவே முன்வந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்.
சங்க நூற்றாண்டின் தொடக்கமாக இந்த ஆண்டில் குடும்ப மேன்மை, சமுதாய நல்லிணக்கம், சுயத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்கள் கடமைகள் என,இந்த 5 அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். பொதுமக்களும் இந்த பணிகளில் இணைந்து தேசப்பணியில் நோள் கொடுக்க அழைக்கிறோம் என்று அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயற்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடிக்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தி, ஆரத்தி மற்றும் தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu