படவேடு பகுதியில் விவசாயியை கட்டிப்போட்டு திருடிய முகமூடி கொள்ளையர்கள்
படவேடு பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட வீடு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு படால்ரோட்டில் விவசாயி நாராயணசாமி என்ற மொட்டை என்பவர் தனது நிலத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வசித்து வருகிறார். இவரின் மனைவி கவுரி, மகன் ராஜா. இவருடைய மனைவி சித்ரா . மகன்கள் விஷ்வா , ராமகிருஷ்ணன் ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.
அதில் ராஜாவின் மனைவி சித்ரா தனது தாய் வீடான விளாங்குப்பம் கிராமத்துக்கும், விஷ்வா ராஜாவின் அக்காள் வீடான அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கும் சென்று விட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜா தனது மகன் ராமகிருஷ்ணனுடன் புதிய மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நாராயணசாமியும், மனைவி கவுரியும் வீட்டின் பின்னால் உள்ள குடிசையில் படுத்துத் தூங்கினர்.
நள்ளிரவில் 2 மோட்டார்சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் 5 பேர் வீட்டின் பின் பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தனர். திடுக்கிட்டு எழுந்த ராஜாவையும், அவரின் மகனையும் கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் வைத்திருந்த பீரோ சாவிகளை கேட்டனர். சத்தம் கேட்டு வந்த நாராயணசாமி, கவுரி ஆகியோரின் கைகளை கயிறால் கட்டிப்போட்டனர்.
ராமகிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொள்ளையர்கள் மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பயத்தால் சத்தம் போடவில்லை. கொள்ளையர்கள் பீரோ, அலமாரியில் நகைகள் ஏதேனும் இருக்கிறதா? எனத் தேடினர். ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வீட்டில் இருந்த வெள்ளிக் குத்துவிளக்குகளை மட்டும் திருடிக் கொண்டனர்.
பின்னர் கவுரியிடம் தாலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அதில் தாலி மட்டும் இருந்ததால் அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். கொள்ளை சம்பவம் நடந்தபோது மழை பெய்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவில்லை. கொள்ளையர்கள் சென்றபின் வெளியே வந்து கவுரி கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். அப்பகுதி மக்கள் எழுந்து வந்து, மோட்டார்சைக்கிளில் தப்பியோடியவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை.
இது குறித்து சந்தவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்&இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கத்தியை மட்டும் பறிமுதல் செய்தனர். புதிதாக வீடு கட்ட ராஜா, தனது மனைவி சித்ரா மற்றும் குடும்ப நகைகளை வங்கியில் அடகு வைத்துள்ளார். இதனால் நகைகள் தப்பியது. கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu