படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா ஆய்வுக்கூட்டம்
படவேடு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போளூர் வட்டம், படவேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருகோவில் படைவீடு கும்பாபிஷேக விழா வருகின்ற 06.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ். நலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலான படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், கூட்ட நெரிசல் ஏற்படும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, படவேடு பகுதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்களை மட்டும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிகபட்சம் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதற்கான அனுமதி சீட்டு, ரேணுகாம்பாள் அம்மன் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திலும், திருவண்ணாமலையில் உள்ள அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலும் வழங்கப்படும்.
அனுமதிக்கப்படும் பக்தர்களும் ஒரே பகுதியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, கோயிலை சுற்றிலும் பக்தர்கள் பரவலாக நின்று தரிசிக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும். உள்ளூர் பக்தர்கள் என்பதற்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணங்களை அளித்து, கும்பாபிஷேக தரிசனத்துக்கான அனுமதி சீட்டு பெறலாம். வெளியூர் பக்தர்கள் வருகையை தவிர்க்க, படவேடு செல்லும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வெளியூர் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. அதேபோல், சிறப்பு பேருந்துகளை இயக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu