வேளாண் விரிவாக்க மையத்தில் இணை இயக்குனர் ஆய்வு
வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வசூரில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளை வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போளூர் அடுத்த வசூரில் உயிர் உர உற்பத்தி மையம் அமைந்துள்ளது . இந்த மையம் 2011 இல் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுக்கு 250 மெட்ரிக் டன் உயிர் உர பொட்டலங்கள் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கியது.
21 ஆம் ஆண்டிலிருந்து திரவ உயிர் உற்பத்தி மையமாக மாற்றப்பட்டு ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் என நிர்ணயிக்கப்பட்டு திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டது. 22 ஆம் ஆண்டிலிருந்து 55 ஆயிரம் லிட்டர் என நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் உயிர் உரங்கள் ஒரு லிட்டர் ரூபாய் 300 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே 65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஆறு வகையான உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . இவ்வகை உயிர் உரங்கள் நைட்ரஜன் , கரையும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.
மேலும் திரவ பொட்டாஷ் உயிர் உரமானது மண்ணில் கட்டுண்டு கிடக்கும் சாம்பல் சத்தை விடுவித்து நீரில் கரையும் சாம்பல் சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது.
பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது . உயிர் உரங்கள் ஒரு வருடம் வரை பயன்படுத்தும் வகையில் இங்கு தயாரிக்கப்படுகிறது.
நெல் , சிறுதானியங்கள் , பயிறு வகைகள் , எண்ணெய் வித்துக்கள் , காய்கறி , பழப்பயிறுகள் மற்றும் மர பயிர்களுக்கும் உயிர் உரங்கள் சொட்டு நீர் மூலமாக எளிதாக வழங்கலாம் . உயிர் உரங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் எளிதாக தற்போது கிடைக்கிறது.
மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாய மக்கள் சூலை அதிக அளவில் உற்பத்தி செய்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி பயனடைய வேண்டும் என விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் அசோக்குமார், உதவி இயக்குனர் சபிதா மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu