ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேக்கம்; பொதுமக்கள் அவதி
சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கியுள்ளதால் இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்குச் செல்ல முடியாமல், கிராம சாலை துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ளது அம்மாபாளையம் கிராமம். இந்தக் கிராமத்தின் வழியாக கண்ணமங்கலம் பகுதியில் இருந்து ஒண்ணுபுரம், புதுப்பாளையம் அத்திமலைபட்டு, மேல் நகா் வழியாகச் சென்றால் ஆரணிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் இணையலாம். இந்தச் சாலை வழியாகத்தான் ஆரணி, வேலூா் திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு பொதுமக்கள் பயணித்து வருகின்றனா்.
மேலும், கண்ணமங்கலம், ஒண்ணுபுரம் பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆரணி மற்றும் பக்கத்து ஊர்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் இந்தப் பகுதி வழியாக தான் செல்வர் , அவ்வாறு செல்லும் அரசுப் பேருந்து மற்றும் கல்வி நிறுவனங்களின் பேருந்துகள் அம்மாபாளையம் வழியாகச் சென்று ஆரணி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலையில் இணைந்து செல்கின்றன.
அம்மாபாளையம் நெடுஞ்சாலையில் காட்பாடி- விழுப்புரம் ரயில் பாதை அமைந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக அம்மாபாளையம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு அவ்வழியாக பொதுமக்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த சுரங்கப் பாதையில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி விடுவதால் சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிா்வாகம் சுரங்கப்பாதையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தப் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாகத் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அம்மாபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் அவசர அத்தியாவசிய பணிகளுக்காக சுரங்கப் பாதையின் மேல் உள்ள தண்டவாளத்தின் மீது நடந்து சென்று கடக்கின்றனா்.
மேலும், இந்தப் பகுதியைக் கடக்க பொதுமக்கள், சிறுவா்கள் பல கி.மீ. தொலைவு வயல்வெளி வரப்புகளில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாகச் செல்லும் கிராமச் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காதவாறு உடனடியாக வெளியேறும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu