தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்
மாற்று திறனாளிக்கான குறை தீர்வு கூட்டம்.
போளூர் தாலுகா அலுவலகத்தில் ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய 4 தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். போளூர் சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் ஆரணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில் போளூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் முகமது ரிஜிவான், துணைதாசில்தார் தட்சிணாமூர்த்தி, தெய்வநாயகி, வருவாய் ஆய்வாளர் பிரேம் நாத் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்க அலுவலர் தேவி நன்றி கூறினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாக கூட்டரங்கில் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் சலுகைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சாய் தள வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதியுடன் உள்ள இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும்.
செங்கம், கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு தாலுகாக்களில் இருந்து திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்றோம். வெகு தொலைவில் இருந்து மாற்றுத்திறனாளிகளால் வந்து செல்ல முடியவில்லை. எனவே, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகளை ஒதுக்கி, உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். பணித்தள பொறுப்பாளர் பணிக்கு மாற்றுத்திறனாளிகளையும் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu