சேத்துப்பட்டு ஒன்றியத்தில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேதம் அடைந்துள்ள கூடலூர் சாலை.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மருத்துவாம்பாடி ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள ஆதிதிராவிடர் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் எனவும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கடைசி கிராமங்களாக கூடலூா், மடவிளாகம், சதுப்பேரி கிராமங்களில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மருத்துவாம்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் பகுதிக்கு செல்லும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை ஜல்லி கற்களை பரப்பிக் கொண்டும் குண்டும் குழியுமாகவும் நடப்பதற்கே கடினமாகவும் இருக்கும் சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாக தான் தத்தனுர், உலகம் பட்டு, நாச்சாவரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய பணிக்காகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் சேத்துப்பட்டு நகரத்திற்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்கள் இந்த சாலை வழியாக தான் வந்தாக வேண்டும்.
மேலும் இந்த சாலை வழியாக பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், கிராம பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் தங்களுடைய இருசக்கர வாகனத்திலும் நடை பாதையாக செல்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர், எனவே இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய ஆணையாளர்கள், என பலரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆதி திராவிட பகுதி மக்கள் இந்த சாலை வழியாக சென்று மருத்துவம் பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வாக்களிக்க முடியாது என தங்களுடைய வாக்குரிமையை புறக்கணித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர் .ஆனால் தற்போது எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.
மேலும் இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கடைசி கிராமங்களாக கூடலூா், மடவிளாகம், சதுப்பேரி என பல்வேறு ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கு ஓதலவாடி-கூடலூா் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
8 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலை ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது.
இதனால், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், அடிக்கடி வாகனங்கள் பழுதாகி இடையிலேயே நின்றுவிடுகின்றன. இதனால் விரைவாக குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடிவதில்லை.
இதுகுறித்து ஒன்றியக்குழுத் தலைவா் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu