போளூர் ரயில்வே மேம்பாலப் பணியில் சுணக்கம்

போளூர் ரயில்வே மேம்பாலப் பணியில் சுணக்கம்
X

பாதியில் நிற்கும் ரயில்வே மேம்பால பணிகள்

ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் போளூர் ரயில்வே மேம்பால பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே மேம்பாலப் பணிக்காக, ரயில்வே கேட், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. ரயில்வே துறை மூலம் மேற்கொள்ளப்படும் மேம்பாலப் பணிக்காக தூண்கள் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

போளூர் வரலாற்றிலேயே, சட்டசபையில் இரண்டு முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது, இந்த மேம்பாலப் பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

போளூர் மக்கள் இப்பணிகள் முடியும் வரை மாற்று பாதையாக புறவழி சாலையை பயன்பாட்டிற்கு வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

இதனால் அருகிலேயே மாற்றுப்பாதை வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, வருவாய்த் துறை, பேரூராட்சி, நெடுசாலைத் துறை, காவல்துறை அதிகாரிகளால் வழி ஏற்படுத்தப்பட்டது.

இந்த வழியில், ரயில்வே ட்ராக்கை ஒட்டி சென்று, கிருஷ்ணா நகர் வழியாக சனிக்கவாடி செல்லும் சாலையில் இணைந்து, வட்டார வளர்ச்சி அலுவலகம் மின்சார வாரிய அலுவலகம் வழியாக கலைஞர் சிலை அருகே கடலூர் சித்தூர் சாலையில் இணைகிறது.

மின் விளக்கு வசதியில்லாத மாற்றுப் பாதை!

இந்த மண் சாலையில், ஒரு சில இடங்களில் மேடு பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கியும், பயணிக்க முடியாத அளவிற்கு மோசமான நிலையிலும் உள்ளது. இதுபோன்ற நேரங்களில், விபத்துகள் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. இந்தச் சாலையை செப்பனிட, பேரூராட்சிக்கு உட்பட்ட இடமாக இருப்பதால், அவர்களை அணுகினால், ரயில்வே துறையை கைகாட்டுகிறார்கள். ரயில்வே துறையோ, மாற்று வழியாக போளூர் புறவழிச் சாலையை அறிவித்துவிட்டு அதற்கான போர்டு வைத்ததும் தங்கள் கடமை முடிந்ததாக சென்று விட்டனர். அரசு அதிகார வர்க்கத்தினரிடையே சிக்கி தவிப்பது சாமானிய பொதுமக்கள்தான்.

ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பயணிக்கும் சாலையை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமான விஷயமே. இதுகுறித்து, திருவண்ணாமலையில் மாதந்தோறும் நடைபெறும் சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் விளைவாக, தற்போது சாலையை சீரமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்துவருகிறது.

அனைத்தையும் விட கொடுமையான விஷயம், இரவு நேரங்களில் பயணிக்க எந்தவொரு விளக்கும் அப்பகுதியில் இல்லாததுதான். இரவுநேரத்தில் கடப்பவர்கள் கும்மிருட்டில், பயந்துகொண்டேதான் கடக்க வேண்டும். அந்தப் பகுதியில் மின் கம்பங்கள் இருந்தும், பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. உடனடியாக தெருவிளக்குகளை அமைக்க வேண்டும்.

சுரங்கப்பாதை (sub way) அமைக்கக்கூடாது? என பொதுமக்கள் கேள்வி

ரயில்வே கேட்டினை தாண்டி, ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. சேத்துப்பட்டு சாலையில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு, மாணவர்கள் வருவதற்கு வாகன வசதி கிடையாது. மாணவர்கள் சைக்கிள் அல்லது நடந்துதான் வர வேண்டும். போளூர் பகுதியில் இருந்து வர வேண்டும் என்றால், ரயில்வே கேட்டினை கடந்துதான் செல்ல வேண்டும்.

மேலும், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டால், பொதுமக்கள், ரயில்வே கேட்டினை கடக்க சுரங்கப்பாதை அமைக்க்கப்படும்போது அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். பாலம் வடிவமைப்பில் சுரங்கப்பாதை (சப் வே) இருக்கிறது. அதை ஏன் முன்னதாகவே அமைக்கக்கூடாது? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படி அமைக்கப்படும் பட்சத்தில், பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர், இலகுரக வாகனங்களில் செல்வோர், அனைவருக்கும் பெரிய அளவில் பயன்படும். முக்கியமாக, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் செல்வோருக்கு பெரிதும் பயன்படும். நேரமும் மிச்சப்படும்.

இப்போதைக்கு, பொதுமக்களின் முக்கிய கோரிக்கை என்னவென்றால், மாற்றுப்பாதையாக அறிவிக்கப்பட்டிருக்கும் சாலையை சீரமைத்து, தார்ச்சாலை அமைக்க வேண்டும். இரவுநேரங்களில் பயமில்லாமல் பாதுகாப்புடன் செல்ல வசதியாக, தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இந்தப் பகுதி பேரூராட்சிக்கு உட்பட்டு வருவதால், பேரூராட்சி நிர்வாகம்தான் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ரயில்வே நிர்வாகத்தால், ரயில்வே பாதைக்கு கீழ் சப்-வே அமைக்கப்படுமானால், பொதுமக்கள் ரயில்வே கேட்டினை கடக்கும் அபாயத்திலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!