பழமையான விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ராஜாஜி தெருவில் 200 வருட பழமையான விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
சேத்துப்பட்டு, பேரூராட்சி ராஜாஜி தெருவில் 200 வருட பழைமை வாய்ந்த விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் தினமும் காலை மாலை என இரு வேலைகளும் பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி அன்றும் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்றும் சிறப்பு பூஜைகள் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களும் தினமும் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த பழமையான கோயிலை புதுப்பித்து புதிதாக கட்ட அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்து, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் இந்தக் கோயில் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சித்தி விநாயகர் கோயில் புதுப்பித்து முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செல்வராஜ்க்கு சாதமாக தீர்ப்பு வந்ததால் இன்று 25ந்தேதி காலை கோவிலை இடித்து அப்புறப்படுத்த பேரூராட்சிநிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளதாக மக்களுக்கு தகவல் பரவியது.
இதனால் பகுதியில் வசிக்கும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜெயந்தி ராமகிருஷ்ணன், மங்கலம் ரமேஷ், பத்மா குமார், கனகா ராஜேஸ்குமார், தர்மராஜா கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜேந்திரன்,ஊர் பிரமுகர்கள் முனிரத்தினம்,மணி, உள்பட 200க்கும் மேற் பட்டோர் சேத்துப்பட்டு நான்கு முறை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் ராஜாராம், பேரூராட்சி செயல் அலுவலா் சரவணன் மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. மேலும், பழைமை வாய்ந்த எங்கள் பகுதி கோயிலை நாங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டவில்லை. ஆகையால், கோயிலை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முழக்கங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த போளூா் டி.எஸ்.பி. மனோகரன், திமுக நகர செயலாளர் முருகன், மண்டல துணைதாசில்தார் விஜயதாரணி ஆகியோர் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் செய்யார் ஆர்டிஓ நேரில் வந்து ஆய்வு செய்து கோயிலை இடிப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் கலைந்து சென்றனா்..
பின்னர் அங்கிருந்து சென்றவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த தாசில்தார் சசிகலா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செய்யார் ஆர்டிஓ தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் அங்கிருந்து அனைவரும கலைந்து சென்றனர். இதனால் சேத்துப்பட்டு நான்கு ரோடு சந்திப்பில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தாலுக்கா அலுவலகத்திலும் பரபரப்பு காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu