திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
X

பிற்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதியில் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் 

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 102 மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23ம் தேதி மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் வார்டன்கள் மற்றும் மாணவர்கள் இரவு நேரத்தில் தங்குவதில்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் கலெக்டர் முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் மாணவர்களுக்கான விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

போளூர் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் கலெக்டர் மேற்கொண்ட ஆய்வில், 55 மாணவர்களுக்கு பதிலாக விடுதியில் 32 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் வீட்டுக்கு சென்று விட்டதாக விடுதி காப்பாளர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து விடுதியில் உள்ள உணவு பொருட்கள் இருப்பு, வருகை பதிவேடு, போன்றவைகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். அப்போது போலி வருகை பதிவேடு மூலம் உணவு பொருட்கள் சுருட்டப்படுவது தெரிய வந்தது.

அடிக்கடி மாணவர்களை மதிய உணவுக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி விட்டு 3 வேளையும் உணவு தருவதாக பொய் கணக்கு காட்டப்படுவதும் தெரிந்தது. மேலும், அந்த விடுதியில் உள்ள அறைகளை ஆக்கிரமித்து ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது. உடனே அலுவலகத்தை காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பிற்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிக்கு கலெக்டர் சென்றார். அங்குள்ள அறைகளை பார்வையிட்ட போது மாணவர்கள் தங்கி இருப்பதற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை. இதுகுறித்து விடுதி காப்பாளர் அரங்கநாதனிடம் விசாரித்த போது, காலையில் 10 பேர் வருகை தந்து சாப்பிடுவார்கள். மற்ற நேரங்களில் எப்போது வருவார்கள் என தெரியாது என கூறினார்.

இதனை கேட்டு கோபமடைந்த கலெக்டர், வருகை பதிவேட்டை ஆய்வு செய்த போது உணவு பொருட்கள் மட்டுமே காணாமல் இருப்பதும் தெரிய வந்தது. போலி வருகை பதிவேடு மூலம் முறைகேடு நடப்பது தெரிய வந்தது. இந்த விடுதியை உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பிற்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதியில் 50 மாணவிகளுக்கு பதிலாக 22 மாணவிகள் மட்டுமே விடுதியில் இருந்தனர். மேலும் பெண்கள் விடுதியில் வார்டன் பணியில் இல்லாமலும் இருந்துள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருந்துள்ளது.

இதுகுறித்து விடுதி காப்பளரிடம் விசாரித்த போது ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்லி கொண்டே இருந்தார். வருகை பதிவேடு மற்றும் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர் அங்கும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பது ஆதாரங்களுடன் தெரிந்தது.

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையை தவிர்த்து பிற இடங்களில் உள்ள 102 மாணவர், மாணவியர் விடுதிகளை ஒரே சமயத்தில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து விடுதிகளிலும் 61 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். நான் போளூரில் ஆய்வு நடத்துகிறேன். இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட நிறைகள், குறைகள் அனைத்தும் அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென நடத்தப்படுகிறது. இதேபோல் ஜவ்வாதுமலையில் வேறு ஒரு நாளில் திடீர் ஆய்வு நடத்தப்படும் என்றார்.

இந்த ஆய்வில் சிக்கிய வார்டன் உள்பட பலர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!