புதிய வங்கி கிளை: திறந்து வைத்த ஆட்சியர்..!
கனரா வங்கி புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
சேத்துப்பட்டு கனரா வங்கி புதிய கிளையை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், சேத்துப்பட்டு கனரா வங்கி புதிய கிளையை குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
பொதுமக்களுக்கு எளிமையானவகையில் கடனுதவிகளை வழங்க வேண்டும் என்பதற்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் கடனுதவி திட்டங்களை பெறுவதற்கு வங்கிகள் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குகின்றன. நமக்கு தேவைப்படும் பொழுது வங்கிகள் எவ்வாறு கடன் வழங்குகிறார்களோ, அதேபோன்று பொதுமக்களாகிய நாமும் நாணயத்துடன் கடனை திருப்பி செலுத்தவேண்டும்.
வங்கியில் பணம் இருந்தால் தான் மக்களின்வாழ்வு வளம் பெறும். வங்கியின் சார்பாக பெறுகின்ற கடனை திருப்பி செலுத்தாவிட்டால், மீண்டும் நமக்கு தேவைப்படும் பொழுது வங்கி கடன் பெறுவது சிரமமாகிவிடும். ஆகவே பொதுமக்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை கட்டாயமாக திருப்பி செலுத்தவேண்டும்.
பொருளாதார ரீதியாக மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் அளிக்கிற பொழுது 100 சதவீதம் திருப்பி செலுத்துகிறார்கள். தமிழகத்தில் நடப்பாண்டிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்குவதற்காக ரூபாய் 35 ஆயிரம் கோடி இ ல க் கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தொழில்துறை மற்றும் வேளாண் துறைகள் சார்பாக பொதுமக்களுக்கு வங்கிகள் மூலமாக கடனுதவிகள் வழங்க ஆண்டு தோறும் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
வங்கிகள் மற்றும் அரசு துறைகள் மூலமாக கடனுதவிகள் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முழுமையாக எட்டப்படுகிறதா என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசினுடைய திட்டங்கள் சார்ந்த வங்கி கடனுதவிகள் மூலமாக கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாக பெரும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தலைமை பொது மேலாளர் ராயர் அஜித் கிறிஷ்ணன், துணை தலைமை பொது மேலாளர் மாதவ் ராவ் , கிளை மேலாளர் பாலாஜி, வங்கி ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu