இ சேவை மைய உரிமையாளரிடம் நூதன முறையில் பணம் மோசடி
கண்ணமங்கலத்தில் உள்ள இ- சேவை மைய உரிமையாளருக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இ-சேவை மையம் நடத்தி வருபவர் முருகன். இவருக்கு வாட்ஸ்அப் குரூப்பில் எஸ்பிஐ வங்கி பெயரில் ஒரு செய்தியும், ஒரு லிங்க்கும் வந்துள்ளது. அதில், அன்புள்ள மதிப்புமிக்க வாடிக்கையாளரே, உங்கள் எஸ்பிஐ நெட்பேங்கிங் வெகுமதி புள்ளிகள் (5899.00) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இன்று காலாவதியாகிவிடும். இப்போது எஸ்பிஐ ரிவார்ட் செயலியை நிறுவி ரிடீம் செய்து, உங்கள் கணக்கில் ரொக்க டெபாசிட் மூலம் ரிவார்டை பெறுங்கள். நன்றி. குழு- எஸ்பிஐ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய முருகன், அந்த லிங்கை தொட்ட அடுத்த வினாடியே அவரது வாட்ஸ்அப் புரொபைல் படம் எஸ்பிஐ லோகோவாக தானாகவே மாறியுள்ளது. மேலும், அவர் இருந்த அனைத்து வாட்ஸ்அப் குரூப்களுக்கும் இந்த லிங்க் இவர் பெயரில் ஆட்டோமேடிக்காக சென்றுள்ளது. தொடர்ந்து, அனைத்து வாட்ஸ் அப் குரூப்களின் தலைப்பும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என லோகோவுடன் மாறியுள்ளது.
இந்நிலையில், சிறிது நேரத்தில் முருகனின் வங்கிக்கணக்கிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக இவருக்கு மெசேஜ் வந்துள்ளது. மேலும், இந்த லிங்க் சென்ற வாட்ஸ் அப் குரூப்களில் லிங்கை தொட்ட பலரது வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வைரலாகி சில வாட்ஸ் குழுக்கள் அதன் அட்மினால் உடனடியாக பிளாக் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த இ-சேவை மைய உரிமையாளர் முருகன் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ் அப் குழுக்களில் வரும் எந்த லிங்கையும் யாரும் தொட வேண்டாம், யாருக்கும் பகிர வேண்டாம் என காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முருகனின் வங்கிக்கணக்கில் ரூபாய் 1.60 லட்சம் இருந்துள்ளது. அதில், சொந்த செலவுக்காக ரூபாய் 1.50 லட்சத்தை எடுத்து விட்டு மீதம் ரூபாய் 10 ஆயிரம் மட்டும் இருந்துள்ளது. இதனால், அதிஷ்டவசமாக ரூபாய் 1.50 லட்சம் தப்பியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu