போளூர் வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியல்
சாலை மறியல் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள முருகபாடி கூட்ரோட்டில் போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பஸ்கள் நின்று செல்வதில்லை என தெரிகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போளூர் நீதிமன்ற வக்கீல்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ள முருகபாடி கூட்டுச்சாலையில் பேருந்துகள் நிற்காததால் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் பயணிகளிடம் தகாத வார்த்தைகள் பேசிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் போளூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருகபாடியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றங்களுக்கு பேருந்தில் செல்பவர்கள் கடலூர் சித்தூர் சாலையில் உள்ள கூட்டு சாலை சந்திப்பில் இறங்கி தான் செல்ல வேண்டும். இங்கு நகரப் பேருந்துகளை தவிர வேறு எந்த பேருந்துகளும் நிற்பதில்லை என குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது.
நீதிமன்றம் பகுதியில் பேருந்து நிறுத்த பிரச்சனை தொடர்கதையாக உள்ளதால் இரண்டு மூன்று முறை வட்டாரப் போக்குவரத்து அலுவலருடன் பேசி இங்கு கண்டிப்பாக பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில தினங்களாக பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு நிற்பதில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு வரும் ஊழியர்களும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு ஒரு தீர்வு காண வழக்கறிஞர்கள் ஒன்று கூடி வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் நாகராஜன் தலைமையில் முருகபாடி கூட்டுச்சாலை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போளூர் வேலூர் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் போளூர் டிஎஸ்பி குமார், போளூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், வட்டாட்சியர் பாபு, அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் பிரபாகரன் ஆகியோர் வந்து சமரசத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அவர் விரைவு பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும் இந்த சாலை மறியல் நடந்து கொண்டிருக்கும்போது நீதிமன்றத்திற்கு பேருந்தில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கறிஞர்கள் புகார் அளிக்கவே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu