ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
பலாமரத்தில் காய்த்து தொங்கும் பலாப்பழங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இந்த வருடம் பலாப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளதாலும், நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் அது பலாப்பழம்தான். காரணம் பலாப்பழத்திற்கு என்றே ஒரு தனி சுவையும் ஒரு மனமும் உண்டு.
பலாப்பழம் திண்டுக்கல் பண்ருட்டி சேலம் பகுதிகளுக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
ஜவ்வாது மலையில் அரிய வகை மூலிகை செடிகள், மா, வாழை, மிளகு, என பல்வேறு பொருட்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையான ஜவ்வாது மலை மற்ற மலைகளை விட அதிக நிலப்பரப்பு கொண்டதாகும்.
கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதியில் பலாப்பழம் அதிக அளவில் சாகுபடி செய்தது இல்லை. குறைந்த அளவிலேயே பலாப்பழம் மரங்கள் இருந்தது. அப்போதெல்லாம் ஜவ்வாது மலைக்கு செல்பவர்கள் மிகக் குறைவு.
அரசு அதிகாரிகள், வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், அதிகாரிகளின் உறவினர்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கும்போது வரும் மருத்துவர்களுக்கு ஜவ்வாது மலை பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பலாப்பழங்களை இலவசமாக வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் ஜவ்வாது மலையில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கோடை விழா அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
இவ்விழாவை காண்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் ஜவ்வாது மலைக்கு வரத் தொடங்கினர்.
அப்போது ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுய உதவி குழுக்கள் விற்பனை அரங்குகளை அமைத்து அங்கு எல்லா விதமான பழங்களையும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வர். அதில் மாம்பழம் பலாப்பழத்திற்கென்றே பொதுமக்கள் வரத் துவங்கினர்.
குறிப்பாக இப்பகுதியில் கிடைக்கும் பலாப்பழம் தேன் சுவையைப் போன்று மிக இனிப்பாக இருக்கும்.
இதனால் கோடை விழாவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் பலா பழங்களை அதிக அளவில் வாங்கி செல்வர். இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக அளவில் பலா மரங்களை சாகுபடி செய்ய தொடங்கினர்.
மற்ற இடங்களைப் போல் இங்கு பலாப்பழம் தோட்டங்கள் கிடையாது, பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் பலா மரங்கள் மட்டுமே இங்கு உண்டு. மலைவாழ் மக்கள் வசிக்கும் நிலங்கள் மற்றும் வீடு என எல்லா இடத்திலும் வீட்டிற்கு ஒரு பலா மரம் என வளர்க்கப்பட்டு வருகிறது.
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்கள் வரை பலாப்பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது. மற்ற மாதங்களில் பலாப்பழம் குறைந்த அளவு கிடைத்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ததாலும் தட்பவெப்ப நிலை சாதகமாக இருந்ததாலும் அதிக அளவில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது.
ஜமுனா மரத்தூர் பகுதியில் உள்ள ஜவ்வாது மலை ஒட்டிய பல கிராமங்களில் 250 க்கும் மேற்பட்ட பலா காய்கள் காய்த்து தொங்குகிறது. இவைகள் அளவுக்கு ஏற்ப 100 ரூபாய் முதல் 450 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜவ்வாது மலையில் விளைந்த பலா பழங்களை திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றியுள்ள வேலூர் திருப்பத்தூர் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நல்ல விலைக்கு வாங்கி செல்ல துவங்கியுள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகள், மலைவாழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜவ்வாது மலையில் பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விளையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆகையால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ஜவ்வாது மலை பலாப்பழங்கள் தான் விற்கப்படுகிறது.
வரும் காலங்களில் மாம்பழம் பலாப்பழம் ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்ய உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu