சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய, மாநில அதிகாரிகள் ஆய்வு..!
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய மாநில அரசு ஆய்வு குழு மின்னணு வேளாண் சந்தை நடைமுறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் நெல் கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் இரண்டாவது இடத்திலும், மாவட்டத்தில் முதலிடத்திலும் உள்ளது.
இந்த சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விலை பொருட்களான மணிலா, கேழ்வரகு, நெல், மிளகாய், நவதானியங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வியாபாரிகளிடம் நல்ல விலை கிடைப்பதால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் விலை பொருளுக்கு இணையதளம் மூலம் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டிய பணத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது. இதனால் இங்கு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மேலும் பல இணைய வழி வலைத்தளங்களை கொண்டு மின்னணு வேளாண் சந்தையில் நிலவரங்கள் குறித்து தமிழக அரசும் மத்திய அரசும் பதிவுகள் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய மாநில அரசு குழுவை சேர்ந்த மத்திய அரசு கூடுதல் பொருளாதார ஆலோசகர் கவியரசு, மார்க்கெட்டிங் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், வேளாண் இணை இயக்குனர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடசெயலாளர் சந்திரசேகர், சேத்துப்பட்டு சூப்பிரண்டு தினேஷ் ஆகியோர் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் உள்ள நெல் மூட்டைகளை நேரடியாக ஆய்வு செய்து நெல்லின் தரம் ஈரத்தன்மை குறித்து கேட்டறிந்தனர். மேலும் எடையாளா்கள், பை மாற்றும் தொழிலாளா்கள், வியாபாரிகளிடம், தற்போது செயல் முறையில் உள்ள மின்னணு வேளாண் விற்பனைச் சந்தை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டறிந்து, தற்போது அக்மாா்க் நெட் இணையதளம் மூலம் விலை விவரம் பதிவு செய்தல் குறித்து எடுத்துரைத்தனா்.
மேலும், விவசாயிகளிடம் இணையதளம் மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணப் பரிவா்த்தனை குறித்து கேட்டறிந்தனா். இந்த ஆய்வானது தமிழகத்தில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை சேத்துப்பட்டு, போளூர் மார்க்கெட் கமிட்டியில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu