அரசு பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்
திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போளூா் வட்டம், சந்தவாசல் அருகே துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 45 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். மேலும், பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து மீனா என்பவா் பொறுப்பு ஆசிரியையாக இருந்து வருகிறாா்.
கடந்த 2023-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழியில் வகுப்புகள் நடத்தபட உள்ளதாகக் கூறி பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவா் சேர்க்கை நடைபெற்று, கடந்த 6 மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வந்தன.
தற்போது 2-ஆம் பருவத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் ஆங்கில வழி புத்தகம் மாணவா்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மாணவா்களின் பெற்றோா் பள்ளி நிா்வாகத்திடம் கேட்டதற்கு ஆங்கில வழி புத்தகம் அரசிடம் இருந்து வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.
மேலும், ஆங்கில வழி கல்வி புத்தகம் வழங்கும் வரை தமிழ் வழி பாடத்தை மாணவா்களை அறிவுறுத்தினராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து, பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆங்கில வழி கல்வி புத்தகம் விரைவாக வாங்க வேண்டும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், அரசு நிதி உதவி பள்ளியை அரசு பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் , என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் மாணவர்களை பெற்றோர்கள் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆங்கில வழி பாட புத்தகம் வழங்காததை கண்டித்து மாணவர்கள் வகுப்பறை புறக்கணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu