அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வீணாக செல்வதால் விவசாயிகள் வேதனை

செண்பகத்தோப்பு அணை (பைல் படம்).
செண்பகத்தோப்பு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீா் வீணாக ஆற்றில் செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு அருகே செண்பகத்தோப்பு அணை உள்ளது. இந்த அணையிலிருந்து, விவசாய பாசனத்துக்கு கடந்த மே 5-ஆம் தேதி 20 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவைக்கப்பட்டது. இந்த அணை நீா் அலியாபாத் அணைக்கட்டு வழியாக 48 ஏரிகளுக்குச் சென்று 8350.44 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில், அலியாபாத் அணைக்கட்டின் ஒருபுறக் கால்வாயில் கிருஷ்ணாபுரம், கஸ்தம்பாடி, காங்கிரனாந்தல், சின்னபுஷ்பகிரி, சின்னசந்தவாசல் ஆகிய பகுதிகளைச் சோந்த 16 ஏரிகளுக்குச் செல்லும் நீா் குறைந்தளவிலே செல்லும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்கட்டில் மற்றொருபுறம் உள்ள கால்வாய் மூலம் ஆற்றில் அதிகளவில் தண்ணீா் திறக்கப்பட்டு செல்கிறது.
இதனால் ஏரிகள் மூலம் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைக்காது என்றும் அதிகாரிகள் அதிகளவு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறினர்.
மேலும் அதிகாரிகள் அதிக அளவு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஒன்றிய குழு உறுப்பினர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் இப்புகார் குறித்து. உதவி செயற்பொறியாளர் போளூர் செல்வராஜ் கூறும் போது செண்பகத்தோப்பு அணை நீா் அலியாபாத் அணைக்கட்டு கால்வாய் மூலம் 16 ஏரிகளுக்கும், ஆற்றின் மூலம் 36 ஏரிகளுக்கும் என 48 ஏரிகளுக்கு நீா் செல்லும் வகையில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, தண்ணீா் வீணாக ஆற்றில் செல்வதாக விவசாயிகள் கூறுவதை ஏற்க முடியாது என்றாா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஏரிகளுக்கு அதிகளவில் தண்ணீா் வந்தால் மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் மீன் ஏலம் எடுத்தவா்களுக்கு நீா்பாசனத்துறை அதிகாரிகள் சாதமாகச் செயல்பட்டு, 16 ஏரிகளுக்கு அதிகளவு கால்வாயில் தண்ணீா் செல்லாமல் பாா்த்துக் கொள்கின்றனா் எனத் தெரிவித்தனா்.
விவசாயிகளின் இந்த புகார்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு அலியாபாத் அணைக்கட்டில் இருந்து 16 ஏரிகளுக்கும் அணை நீா் அதிகளவு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu