போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி
பைல் படம்
போளூர் தாலுகாவில் விவசாயிகள் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதனை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் விவசாயிகள் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குதான் கொண்டு வருகின்றனர். நெல் மூட்டைகள் அதிக வரத்தால் திடீரென்று போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது. மேலும் வருகிற 23-ந் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரி வெங்கடேசன் கூறியதாவது:-
தொடர்ந்து தினசரி ஆயிரக்கணக்கான மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். இதனால் இந்த மார்க்கெட்டிங் கமிட்டி இருக்கும் திறந்தவெளி பகுதி மற்றும் இருப்பு அறைகள் நிறைந்து காணப்படுகிறது.
இங்கு ஒரு நாளைக்கு சுமார் 5,000 மூட்டைகள் மட்டுமே எடை போடப்படும் வசதி உள்ளது இதனால் நாள் கணக்கில் வந்து காத்திருக்கும் சூழல் உள்ளது இதை தவிர்க்கவே தற்காலிகமாக ஒழுங்குமுறை கூடம் மூடப்படுகிறது.
நெல் மூட்டைகள் அதிக வரத்தால் விலை குறைய வாய்ப்புண்டு. இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள். இதனை கருத்தில் கொண்டு வருகிற 23-ந் தேதி வரை நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வர வேண்டாம் என்று விவசாயிகளிடம் கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய சங்க தலைவர் பார்த்திபன் கூறியதாவது:-
இதுபோன்ற நேரங்களில் விவசாயிகள் கஷ்டப்படக் கூடாது என்று தமிழக அரசு போளூர் தாலுகாவில் புதுப்பாளையம், குன்னத்தூர், மண்டகொளத்தூர் ஆகிய 3 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த 3 நேரடி கொள்முதல் நிலையங்களில் பதிவுகள் அதிகமாக உள்ளதால் நெல் மூட்டைகளை எடுப்பதற்கு தயங்குகின்றனர்.
இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். இந்த 3 நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு இது போன்ற சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu