தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
X

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாநில இணை செயலாளர் கௌரி சிறப்புரை ஆற்றினார்.

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கலந்தாய்வு முறையில் பணியிடம் மாறுதல் வழங்க வருவாய் துறை செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் போளூர் வட்டாட்சியருமான சண்முகம் தலைமை தாங்கினார்.

மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். மாநில இணை செயலாளர் கௌரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாண்பமை உச்ச நீதிமன்றம் இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்திய வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பட்டியலின்படி பணியிடம் வழங்கப்பட வேண்டும்.

இளநிலை வருவாய் ஆய்வாளர் முதல் வட்டாட்சியர் நிலை வரை ஒரே அலுவலகத்திலேயே பணிபுரிந்து வருவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட வருவாய் அளவில் உள்ள அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் உள்ள பணி இடங்களில் சுழற்சி முறையில் அனைவரும் பணிபுரியும் வகையில் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட ஆவண செய்ய வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களும் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் .

பெண் ஊழியர்கள் தங்களது அரசு பணியை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு அருகாமையில் உள்ள வருவாய் வட்டங்களில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாவட்ட அளவில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பணி அமர்வு விதிகள் அலுவலக நடைமுறைகள் பதிவேடு பராமரிப்பு மற்றும் நிலம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நில அளவை மற்றும் நிலவரி திட்டம் மற்றும் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பயிற்சி உரிய காலங்களில் வழங்கப்பட வேண்டும். நீதி பரிபாலன பயிற்சி , காவல்துறை பயிற்சி ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

நமது மாவட்டத்தில் ஊழியர்களின் பணி சுமை கருத்தில் கொண்டு கால அவகாசம் இன்றி மற்றும் பணி நேரத்திற்கு முன்பும் பணி நேரத்திற்கு பின்பும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜ் , மாவட்ட துணை தலைவர் சிவலிங்கம் , மாநில நிர்வாகிகள் சதீஷ் , சரவணன் , பாலமுருகன் , மாரிமுத்து அமல்ராஜ் , தேவி , கோமதி, சுசீலா , முருகதாஸ் , தமிழ்நாடு வருவாய்த் துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் .

மாவட்ட செயற்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!