அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது: இபிஎஸ்

அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது: இபிஎஸ்
X

போளூரில் நடைபெற்ற விழாவில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார்.

அதிமுகவை பொறுத்தவரையில் ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தொய்வின்றி செய்து வருகின்றது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

போளூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, போளூர் நகரில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. உயர்கோபுர மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா ஆகியவை நேற்று போளூர் பஸ் நிலையம் எதிரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், போளூர் எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உயர் மின் கோபுரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். முன்னதாக அவருக்கு அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வெள்ளி வீரவாள் வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

போளூர் பேரூராட்சியில் வசிக்கின்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரூ.2 கோடி மதிப்பில் சாலை, குடிநீர் வசதி, உயர்மின் கோபுரம் மின்விளக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதிமுகவை பொறுத்தவரையில் ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தொய்வின்றி செய்து வருகின்றது.

மக்களுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பெறுகின்ற ஒரே கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். இன்று ஆட்சியில் அதிமுக இல்லை. ஆனால் ஆட்சியில் இருக்கின்ற திமுக அரசை விட அதிகமான நன்மைகள் செய்யும் அளவிற்கு பணியாற்றி கொண்டு இருக்கிறோம். முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரது அரசால் போடப்பட்ட திட்டங்களை தான் தற்போது உள்ள முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வருகின்றார்.

திருவண்ணாமலையில் ஜெயலலிதாவின் அரசால் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட பாலம் திறக்கபடமால் இருந்தது. அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். குடிமராமத்து திட்டத்தினால் ஏரி, குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டதால் தான் இன்று ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கின்றது.

பெய்த மழையில் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்கின்றது. இப்படி ஒவ்வொரு திட்டத்தை பார்த்து, பார்த்து செய்த அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசாங்கம். இன்றைக்கு உள்ள திமுக அரசாங்கம் நாம் கொடுத்து வந்த திட்டங்களை முடக்கி வைத்து உள்ளனர். குழந்தைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மடிகணினி கொடுத்தோம். அதையும் இந்த ஆண்டு கொடுக்கப்பட வில்லை. கொடுப்பாங்களா, கொடுக்கமாட்டார்களா என்பது தொியவில்லை. சுமார் 58 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி உள்ளோம்.

கடந்த ஓராண்டில் எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது. மக்களோடு மக்களாக செயல்பட்ட அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசங்கம். அதனால் வரும் காலங்களில் திமுக அரசாங்கத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், மாவட்ட அவைத் தலைவர் இ.என். நாராயணன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஏ.செல்வன், மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாசலம், பொதுக்குழு உறுப்பினர் எ.ராஜன், போளூர் நகர செயலாளர் ஜிபாண்டுரங்கன், கிளை கழக செயலாளர் சத்யராஜ், நகர இளைஞர் அணி சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers