ஜவ்வாது மலையில் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு
ஜவ்வாது மலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் தாலூர் கிராமத்தில் இரண்டு விஜய நகர கால கல்வெட்டுகளும், எருக்கம் பட்டு கிராமத்தில் ஒரு பல்லவர் கால நடுக்கல் கல்வெட்டும், பாடானூரில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, நந்தகுமார் ஆகியோர்கள் ஜவ்வாதுமலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த 3 இடங்களில் 4 கல்வெட்டுகளை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது
ஜவ்வாதுமலை தாலூர் கிராமத்தில் நிலத்தில் உள்ள பலகைக்கல்லில் உள்ள விஜயநகர கால கல்வெட்டு கிருஷ்ண தேவமகாராயர் காலத்தியதாகும். கிருஷ்ண தேவமகாராயரின் காரியத்து கடவரான மனுகம நாயக்கர் அதியன் வரதன் என்பவர் தென்மலையாள நாட்டு செவபுரம் வெள்ளை கவுண்டனுக்கும், மலிய கவுண்டனுக்கும், மறமுண்டன் கவுண்டனுக்கும் கல்ஏரி நாட்டுவர்க்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது.
மற்றொரு கல்வெட்டு ஒரு பக்கம் மட்டுமே கிடைக்கிறது. அதில் கோட்டுத்தலைப்பற்று நாட்டுக்கும் தேவர் தந்த திருமுகப்படிக்கும் நான் தந்த ஓலைப்படியும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் அவ்வனார்க்குடிக்கு நாலு பணமும் பருவருக்கு இரண்டு பணமும் கொடுக்க வேண்டியது என்றும் அந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. எருக்கம்பட்டு கிராமத்தில் கிடைக்கப்பெற்ற நடுகல் கல்வெட்டில் வீரன் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் ஏந்தியவாறு சண்டைக்கு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது.
இந்த சிற்பத்தின் மேற்பகுதியிலும் வலப்புறத்திலும் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இதில் மேற்பகுதியில் கோவிசைய என்ற வார்த்தையும் வலதுபுறத்தில் சிதைந்த நிலையில் எழுத்துக்களும் காணப்படுகின்றன. இதன் சிற்ப அமைப்பைக் கொண்டு இதன் காலத்தை பிற்கால பல்லவர்கள் காலத்தைச் சார்ந்ததாக கருதலாம். நம்மியம்பட்டு அடுத்த பாடானூர் கிராமத்தில் ஊருக்கு வெளிப்புறமாக கிழக்கு நோக்கிய நடுகல்லில் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் கொண்டு வீரன் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. உருவத்தின் மேற்பகுதியில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
ஜவ்வாதுமலையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான வரலாற்றுத் தடயங்களை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறது. இதில் கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் அவ்வூர் உள்ளுர் வரலாற்றையும் வழக்காறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் மலையின் பல இடங்களில் கல்வெட்டுடன் கூடிய நடுகற்கள் கிடைத்து வருகின்றன. இவை ஜவ்வாதுமலையின் வரலாற்று பொக்கிஷங்களாகும். வரலாற்று ஆய்வுக்கும் பண்பாட்டு ஆய்விற்கும் முக்கியமான இக்கல்வெட்டுகளை முறையாக ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும் எனக்கு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu