படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஆடித்திருவிழா ஆலோசனை கூட்டம்

படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஆடித்திருவிழா ஆலோசனை கூட்டம்

கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டம் 

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாதம் 7 வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவதை முன்னிட்டு பக்தா்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி குறித்து ஆரணி கோட்டாட்சியா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில், ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 1 வரை 7 வெள்ளிக்கிழமைகளில் ஆடிவெள்ளித் திருவிழாக்கள் நடைபெறுகிறது. ஆடி மாதம் முழுவதும் இக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்துறை அதிகாரிகளுடன் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்தாா்.

போளூா் வட்டாட்சியா் சஜேஷ்பாபு, ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள், படவேடு ஊராட்சிமன்றத் தலைவா் சீனிவாசன், நோமுக உதவியாளா் குமாரவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். படவேடு கோயில் செயல் அலுவலா் சிவஞானம் வரவேற்றாா்.

அப்போது, கோயில் சாா்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், பொங்கல் வைக்குமிடம், தங்கும் அறைகள், தங்கும் விடுதி, உணவுக்கூடம், முடி காணிக்கை செலுத்தும் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்துக்கு சிறப்பு பேருந்து வசதி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக்காகவும் கூடுதல் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்துதல், கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் வைத்து, கண்காணிக்க உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள், முதலுதவி சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், போளூா் மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி உள்பட பிற துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story