சேத்துப்பட்டு ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சி தலைவர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கரைப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த இந்திரா (வயது 46) என்பவர் உள்ளார். இவர், 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததை ஊராட்சி செயலாளர் நித்யானந்தம் உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தார்.
அதன்பேரில் கூடுதல் கலெக்டர் நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது அவரை, இந்திரா உதாசீனமாக பேசியதாக தெரிகிறது. பின்னர் கலெக்டர் முருகேஷ் கரைப்பூண்டி ஊராட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா, ஊராட்சி பணியாளர்களின் அன்றாட பணிகளை தடுத்து வருவதாகவும், மேலும் ஊராட்சி செயலாளர் நித்தியானந்தம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மூர்த்தி, ரேணுகோபால், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சுரேஷ்குமார் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கம் செய்து, அரசு பணி செய்யவிடாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி வைத்ததாகவும், பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அதிகாரி ரேணுகோபால் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu