நில அளவையரை கண்டித்து மரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த கார் டிரைவர்
மரத்தின் உச்சியில் ஏறி கயிறு கட்டிக் கொண்டு தூக்கில் தொங்கி விடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்த மணிகண்டன்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி அண்ணா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37), கார் டிரைவர். இவர் அண்ணா தெருவில் தாய், சகோதரியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் தனக்கு சேர வேண்டிய இடம் அளவு குறைவாக உள்ளதாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனக்கு சொந்தமான இடத்தை சரியாக அளந்து தரும்படி பலமுறை மனு அளித்துள்ளார். பலமுறை நிலம் அளவீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அளவீடு சரியாக வரவில்லை.
இந்த நிலையில் இன்று நிலஅளவையர்கள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி மணிகண்டன், சேத்துப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தின் உச்சியில் ஏறி கயிறு கட்டிக் கொண்டு தூக்கில் தொங்கி விடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் மற்றும் தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் விரைந்து வந்து மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மணிகண்டனை மீட்க முயற்சி செய்தனர். மரத்தில் யாராவது ஏறினால் நான் தூக்குப்போட்டு தொங்கி விடுவேன் என மிரட்டினார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், எனக்கு சேர வேண்டிய இடத்தை சரியான முறையில் அளந்து இடத்தை மீட்டு தர வேண்டும் என்று மரத்தின் உச்சியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
தகவல் அறிந்த அண்ணா தெரு மக்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் மணிகண்டனுக்கு ஆதரவாக தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார், நில அளவையரை உடனடியாக வரவழைத்து முறையாக அளந்து உடனே தீர்வு காணப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
மேலும் மணிகண்டனிடம் உடனடியாக நில அளவீடு செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் மணிகண்டன், மேலிருந்து கீழே இறங்கினார். சுமார் ஒரு மணி நேரம் மரத்தின் உச்சியில் தற்கொலை செய்வதாக டிரைவர் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu