கோயில் வளாகத்தில் மது குடிப்பதை தட்டி கேட்டவர் மீது துப்பாக்கிச்சூடு

கோயில் வளாகத்தில் மது குடிப்பதை தட்டி கேட்டவர் மீது துப்பாக்கிச்சூடு
X
கோவிலில் மது அருந்தியவர்களை தாக்கியவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. குறி தவறியதால் அவர் உயிர் தப்பினார்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் லட்சுமணன் .

இரவு 10 மணியளவில் அங்குள்ள கோவில் வளாகத்தில் உள்ள மேடையில் இவரும் இவரது நண்பர் சுப்பிரமணியும் சக நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். கோவில் இடத்தில் மது அருந்துவதை கேள்விப்பட்ட ஊர்பொதுமக்கள் சிலர் கண்டித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அவர்களை திட்டி அனுப்பி உள்ளார்.

இதனை தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது நண்பர் பாபு ஆகியோர் நேரில் சென்று லட்சுமணனை அடித்து வெளியே போங்கடா என்று திட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், 'என்னையே வெளியே போக சொல்றீங்களா? நான் யார் தெரியுமா என கேட்டபடி தனது வீட்டுக்கு ஓடி சென்று அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து சுதாகரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது குறி தவறி கோயில் சுவற்றின் மீது குண்டுகள் பட்டு தெரித்துள்ளது. அதிர்ச்சிஅடைந்த சுதாகர் துப்பாக்கியை அவரிடமிருந்து பறிப்பதற்காக பிடித்து இழுத்த போது அதன் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதனால் பயந்து போன சுதாகர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றபோது லட்சுமணன் நாட்டுத்துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து சுதாகர் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமி, காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காவல் உதவி ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் காவல்துறையினர் பூங்கொல்லைமேடு கிராமத்திற்கு சென்று லட்சுமணனை கைது செய்து அவர் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மது குடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!