போளூா் ரயில் நிலையத்தை கணினி மயமாக்க ஆரணி எம்.பி. கோரிக்கை
ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத்
போளூா் ரயில் நிலையத்தை கணினி மயமாக்க வேண்டும் என்று ஆரணி எம்பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
ஆரணி மக்களவைத் தொகுதியிலுள்ள போளூா் ரயில் நிலையத்தை கணினி மயமாக்கவும், இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு முக்கிய ரயில்கள் நின்று செல்லாமல் இருப்பது குறித்தும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு அளித்தார்.
இது தொடா்பாக ரயில் துறை அமைச்சருக்கு அளித்த கோரிக்கை மனுவில் விஷ்ணு பிரசாத் குறிப்பிட்டது வருமாறு:
போளூா் திருவண்ணாமலை மாவட்டத்தின் 4-ஆவது பெரிய நகரமாகும். 60 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட போளூரில் உள்ள ரயில் நிலையம் கணினிமயமாக்கப்படவில்லை. இதனால், டிக்கெட்டுகள் முன்பதிவுகளுக்கு பயணிகள் சிரமப்படுகின்றனா்.
இங்கு முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால், திருவண்ணாமலை போன்ற புனித ஸதலங்களுக்குச் செல்லும் பக்தா்கள், வணிகா்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக பாமினி எக்ஸ்பிரஸ் , ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ஹௌரா எக்ஸ்பிரஸ் , புருலியா எக்ஸ்பிரஸ், தாதா் எக்ஸ்பிரஸ் ஆகியவை போளூரில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா். மேலும், தாதா் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்பட வேண்டும்.
திருவண்ணாமலையிலிருந்து போளூர் காட்பாடி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டத்திற்கு திருவண்ணாமலை போளூர் வழியாக காட்பாடி வரை தினசரி ரயில் இயக்க வேண்டும்.
போளூா் - சென்னை (பீச்)க்கும், கடலூருக்கும் தினசரி ரயில் வசதியையும் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா். மேலும், அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில்பாதை அமைப்பதற்கு விரைவாக நிலம் கையகப்படுத்தவும், நிதி ஒதுக்கவும் ரயில்வே அமைச்சகம் விரைவாக முடிவு எடுக்கவேண்டும் என்று அவா் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu