ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார்; அதிகாரிகள் நேரில் விசாரணை

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார்; அதிகாரிகள் நேரில் விசாரணை
X

நட்டு வைக்கப்பட்ட சிமெண்ட் கட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், இந்திரவனம் ஊராட்சியில் 15-வது நிதிக் குழு மானியத்தின் மூலம், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் (2022-23) கீழ் ரூ.3.69 லட்சம் மதிப்பில் 52 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர அனுமதி வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாக சிமென்ட் கட்டை மட்டும் அமைக்கப்பட்டது. குடிநீர் குழாயை பதிக்கவில்லை. குடிநீர் இணைப்பும் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்காமல், பழைய குடிநீர் இணைப்பில் 10 வீடுகளுக்கு இந்த திட்டத்தில் இணைத்துள்ளனர். மேலும் குடிநீர் பைப்லைன் பதிக்காமல் 42 வீடுகளுக்கு குடிநீர் குழாய் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்து, குடிநீர் இணைப்பு கொடுத்ததாக செய்துள்ளனர்.

குடிநீர் வராததால் அந்த பகுதி மக்கள், ஏரி மற்றும் கிணறுகளில் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. அதில், சிமென்ட் கட்டையை எளிதாக பிடுங்கும் இளைஞர், குழாய் பதிக்கப்பட்டதற்கான தடயம் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடு செய்துள்ள ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட ஊரக செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் , உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தன், செய்யாறு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார், சேத்துப்பட்டு ஆணையாளர் ரேணுகோபால், பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இந்திரவனம் கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது நிலத்தடியில், குடிநீர் குழாய்க்கு பைப் லைன் அமைக்காதது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பகலில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் .

அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணி சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டன. திட்டப்பணியின் விவரம் குறித்து அறிவிப்பு பலகையை ஒப்பந்ததாரர் வைக்கவில்லை. சிமென்ட் கட்டையை மட்டும் முதற்கட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கவில்லை. 52 வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு விரைவாக கொடுக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படும், என்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், சேத்துப்பட்டு நகர செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டை மூடி மறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.

Next Story