நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று போளுருக்கு பெருமை சேர்த்த பெண் நீதிபதி
பெண் நீதிபதியாக தேர்வான ஐஸ்வர்யா
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா , நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று போளூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 245 சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்த காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.
மேலும் முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த தேர்வில் தேர்வானவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் நாலு மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான நேர்முக தேர்வு முடிவுகளை டி என் பி எஸ் சி வெளியிட்டுள்ளது.
அதில் போளூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் விவசாயியான கார்த்திகேயன் பூர்ணிமா தம்பதிகளின் மகள் ஐஸ்வர்யா அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் உரிமையில் நீதிபதிக்கான தேர்வை எழுதி அதில் மாநில அளவில் 20 வது இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இவர் சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 2022 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளார். தனது ஒரு வருட கடின முயற்சியால் முதல் தேர்விலேயே மாநில அளவில் 20 வது இடம் பிடித்து நீதிபதியாக வெற்றி கண்டுள்ளார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா தெரிவிக்கையில், என்னுடைய தாத்தா முனியன் என்பவர் என்னை சட்டம் பயில வைத்து சட்டத்துறையில் ஒரு நீதிபதியாக முன்னேற்ற வேண்டும் என அவருடைய ஆசையும் லட்சியமாக இருந்தது. அதற்காக என்னுடைய தாத்தா முனியன் பல்வேறு ஆலோசனைகளை எனக்கு வழங்கியும் நான் படிப்பதற்கு சிறுவயதில் இருந்து மிக ஊக்கமும் அளித்தார் .
அதனுடைய வெளிப்பாடாக நான் சட்டம் பயின்றேன். பின்பு ஓராண்டு கால பயிற்சிக்கு பிறகு தமிழ்நாடு அரசு நடத்திய பணியாளர் தேர்வாணையத்தில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே வெற்றியும் கண்டுள்ளேன். இந்த வெற்றியை என்னுடைய தாத்தாவிற்கு முழுமையாக சமர்ப்பணம் செய்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தேர்வில் வெற்றி பெற்ற ஐஸ்வர்யாவிற்கு போளூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள், உறவினர்கள், வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலை ஜவ்வாது மலையை சேர்ந்த ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த முறை அரசு தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இரண்டு பெண்கள் நீதிபதிகளாக தேர்வானது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu